• May 20, 2024

அ.தி.மு.க.மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் நடந்த விவாதம் என்ன? டி,ஜெயக்குமார் பேட்டி

 அ.தி.மு.க.மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் நடந்த விவாதம் என்ன? டி,ஜெயக்குமார் பேட்டி

சென்னை  உள்ள அதிமுக தலைமை  அலுவலகத்தில் தலைமைக்கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது,.

கட்சியின் இடைக்கால பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தின் இறுதியில் அமைப்பு செயலாளரும் முன்னாள் அமைச்சருமான டி.ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி

தமிழகத்தில் நிலவுகின்ற அரசியல் சூழ்நிலைகள்,அரசியல் சூழ்நிலைகள் என்று சொல்லும்போது குறிப்பாக இந்த 20 மாத காலத்தில்  திமுக ஆட்சிக்கு வந்து ஒரு விடியல் அவர்களுடைய குடும்பத்திற்கு ஏற்பட்டதே தவிரத் தமிழகத்திற்கு விடியல் கிடைக்கவில்லை. வாக்களித்த மக்களுக்குத் தேர்தல் காலத்தில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் முழுக்க,முழுக்க மக்களுக்குத் துரோகம் செய்தது

இன்றைக்கு மக்கள் எப்போது தேர்தல் வரும் என்று நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்.உண்மையில் சொல்லப்போனால் பாராளுமன்ற தேர்தலும்,சட்டமன்ற தேர்தலும் ஒன்றாக வந்தால் நல்லது.அதுபோல இந்த விடியா அரசின் அவலங்களை எடுத்துச் சொல்லவேண்டும்.2024 ல்  பாராளுமன்ற தேர்தலோடு சட்டமன்ற தேர்தல் வந்தாலும் இன்னும் நல்ல விஷயமாக இருக்கும். கோட்டையை விட்டு திமுக போய்விடும்.அந்த அளவுக்கு மக்கள் கடும் கோபத்தில் உள்ள நிலையில்,கட்சி பணிகளை எடப்பாடியார் முடுக்கிவிட்டு பாராளுமன்ற தேர்தலுக்கான பூர்வாங்க பணிகள் நடைபெற்றுவரும் நிலையில் ,கிளைக் கழகத்திலிருந்து தலைமைக்கழக நிர்வாகிகள்வரை என்னென்ன செய்யவேண்டும் என்று  அறிவுரை வழங்கியுள்ளார். அந்த அடிப்படையில் இந்த கூட்டம் நடைபெற்றது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்கள் கேட்ட கேள்வியும் அதற்கு டி.ஜெயக்குமார்  அளித்த பதிலும் வருமாறு.:-

கேள்வி : உட்கட்சி பிரச்சினை,ஓ.பன்னீர்செல்வம் குறித்து ஏதாவது பேசப்பட்டதா

பதில் : உட்கட்சியில் பிரச்சனை எதுவும் இல்லை.பிரச்சனை இல்லாத ஒரு விஷயத்தை இங்கு பேசவேண்டிய அவசியம் இல்லை. எங்களுடைய ஒரே நோக்கம் 2024 ல் தி.மு.க.வை வீழ்த்தவேண்டும். நாளும் நமதே 40  ம் நமதே அதற்கு ஏற்றவாறு  நிர்ணயம் செய்யும் வகையில்தான் இந்த கூட்டம் நடைபெற்றது.

கேள்வி : யார் தலைமையில் கூட்டணி என்பது குறித்து முடிவு செய்துவிட்டீர்களா

பதில் : அதில் என்ன சந்தேகம் உள்ளது. நேற்றும் சொல்லிவிட்டோம்,இன்றும் சொல்லிவிட்டோம்,நாளையும் இதைத்தான் சொல்வோம்.எடப்பாடியார் பல முறை ஊடகங்களைச் சந்திக்கும்போது அந்த தகவலைத் தெரிவித்துள்ளார். பாராளுமன்ற தேர்தலாக இருந்தாலும் சரி,சட்டமன்ற தேர்தலாக இருந்தாலும் சரி அதிமுக தலைமையிலான கூட்டணிதான். சீட்டை பொறுத்தவரையில் கட்சி முடிவு செய்யும். எந்தெந்த கட்சிகள் எங்கள்  தலைமையை ஏற்று வருகிறதோ,பாராளுமன்ற தேர்தல் நெருங்கும்போதுதான் தெரியும்.

கேள்வி : அ.தி.மு.க.வின் சின்னத்தையும், கொடியையும் பயன்படுத்தக் கூடாது என்று ஒரு நோட்டீஸ்  அனுப்பியிருந்தீர்கள். அதனை நான் பயன்படுத்துவதை யாராலும் தடுக்க முடியாது என்று ஒ.பன்னீர்செல்வம்விளக்கம் அளித்துள்ளாரே

பதில் : நான் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மாளிகையிலிருந்து நான் பேசி வருகிறேன்.அதிகாரப்பூர்வமாகக் கட்சிக் கொடி பறந்துவருகிறது. கட்சியின்   பொதுக்குழு கூடி ஏகமனதாக எடப்பாடிரை இடைக்கால பொதுச்செயலாளர் என்று ஏற்றுக்கொண்டது. அதே பொதுக்குழு ஓ.பி.எஸ் மற்றும் அவரை சார்ந்தவர்களை நீக்கியுள்ளது. உயர்நீதிமன்றத்தில் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு ஒரு சரியான தீர்ப்பு வழங்கியிருக்கும் நிலையிலே அவர் எப்படி கட்சியாக முடியும்..அவர் அனுப்பிய நோட்டீஸ் எந்த காலத்திலும் எடுபடப் போவதில்லை.அவருடன்  இருக்கும் நான்குபேரைத் திருப்தி செய்வதற்காக வேண்டுமானால் நானும் நோட்டீஸ் அனுப்பினேன் என்று சொல்லிக்கொள்ளலாமே தவிர அதனால் ஒரு தாக்கமும் இருக்காது.

கேள்வி  :சட்டப்பேரவை 9 ம் தேதி கூடுகிறது.எதிர்க்கட்சித்துணை தலைவர் தொடர்பாக முடிவு எடுக்கவில்லை என்று பேரவைத் தலைவர் தெரிவித்துள்ளாரே.

பதில்:- பேரவைத் தலைவர் என்பவர் அதிகாரம் படைத்தவராக இருக்கலாம்.நானும் பேரவைத் தலைவராக இருந்தேன்.என்னைப் பொறுத்தவரையில் என்ன விதிகள்,என்ன மரபு,கால காலமாக எந்த வழிமுறை பின்பற்றுகிறோம் இதனைத்தான் பின்பற்றினோம். அந்த வகையில் பயன்படுத்தினால் ஜனநாயகத்தைக் காப்பாற்றும் வகை என்று நிச்சயமாகக் கருதமுடியும். ஆனால் அதுபோல இல்லாமல் வெறுமனே சட்டமன்ற மாண்புகள்,மரபுகளை எல்லாம் தூக்கி காலில் மிதித்துவிட்டுச் சென்றால் இதனை மக்கள் பார்த்துக்கொண்டிருக்கிறார்.மக்கள் கண்டிப்பாக இதற்குச் சரியான பதிலடி அளிப்பார்கள். அதிகாரம் இருக்கின்றது என்பதற்காகச் சட்டத்தைக் கிழித்து எரிவதும்,சட்டப்படி நடக்காமல் இருப்பதற்கும் மரபுப்படி நடக்காமல் இருப்பதற்கும்,காலகாலமாக பின்பற்றப்படும் வழிமுறைகளைத் தூக்கி குப்பையில் போடுவது என்று இருந்தால் ஜனநாயகத்தின் கருப்பு என்ற வரலாற்றைச் சட்டமன்றம் படைக்கக்கூடாது என்றுதான் குறிப்பிடுகிறோம்.

கேள்வி : சி.வி.சண்முகம் பா.ஜ.க.வுடன் கூட்டணி குறித்துத் தொடர்ந்து பேசிவருகிறார்.இது குறித்து இந்த கூட்டத்தில் பேசப்பட்டதா.

பதில் : அது போன்ற எந்த கருத்தும் பேசவில்லை. பாராளுமன்ற தேர்தலில் நாம் வெற்றிபெறவேண்டும்.நம்முடைய திட்டங்கள் மக்களிடையே சென்றடைந்துள்ளது.அதற்கு உண்டான வேலைகளை பார்க்கவேண்டும். பூத் கமிட்டி போடவேண்டும். சமூக ஊடகங்களில் நான் நன்றாகச் செயல்படவேண்டும் போன்ற விஷயங்கள் கலந்து பேசப்பட்டது.

கேள்வி : சீட் குறித்து முடிவு செய்யப்பட்டதா

பதில் : பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடம் உள்ளது.ஏதுவாக இருந்தாலும் சீட் குறித்து நாங்கதான் முடிவு செய்வோம்.எங்களுக்கு யாரும் உத்தரவு போட முடியாது. நாங்கள் முடிவு செய்வதுதான்.

இவ்வாறு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் பதில் அளித்தார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *