• May 19, 2024

மர்ம மாளிகையில் காதல் ஜோடி .…(சிறுகதை)

 மர்ம மாளிகையில் காதல் ஜோடி .…(சிறுகதை)

ஊருக்கு ஒதுக்குபுறமாக உள்ள அந்த மாளிகை…
நூறாண்டுகளுக்கு மேலிருக்கும். பழமையின் வாசனை வீசும். வவ்வால்கள் பறந்து வெளியே வரும்

அது ஒரு வாழ்ந்து மறைந்த ஜமீன்தாரின் பழைய மாளிகை என்று சொல்வார்கள்.
கட்டிடம் சிதைந்து காணப்பட்டது. ரோட்டிலிருந்து அரை கிலோமீட்டர் தூரத்திலிருந்த அந்த மாளிகைக்கு யாரும் செல்லமாட்டார்கள்…
இரவு நேரம் ஒரு பெண்ணின் அலறல் சத்தம் கேட்கும் என்று சொல்வார்கள். அந்த மாளிகைக்கு சென்றவர்கள் திரும்பியதில்லை என்று ஆளாளுக்கு ஒரு கதை கட்டிவிட்டனர்.
இதனால் அந்த பகுதியில் உள்ள வர்களுக்கு மர்ம மாளிகை என்றால் ஒரு திகில்தான்.
அன்று இரவு பன்னிரெண்டு மணி இருக்கும்…இடி மின்னலுடன் பலத்த மழை…ரோட்டில் தண்ணீர்பெருகி ஓடியது..
இருட்டில் எங்கிருந்தோ நரி ஊளையிடும் சத்தம்…மழைதொடர்ந்து கொட்டியது.
இந்த நேரத்தில் ஒரு காதல் ஜோடி…உயிரை கையில் பிடித்துக்கொண்டு தொப் தொப்பென்று ஓடிவந்தது. அந்த பெண்ணின் கழுத்தில் மஞ்சள் கயிறு மின்னியது. கல்யாண புடவையில் அந்த பெண் காட்சி தந்தாள். உடன்வந்த வாலிபர் பட்டுவேட்டி பட்டு சட்டையில் இருந்தார். இருவரும் இன்று காலையில்தான் வீட்டைவிட்டு ஓடி திருமணம் செய்திருக்கவேண்டும்.
அவர்கள் கண்களில் பயம் தெரிந்தது.பெருகி ஓடிய தண்ணீரில் செருப்பு காலுடன் அவர்கள் ஓடிவந்தபோது…சத்தம் எதிரொலித்தது. இருவருக்கும் நெஞ்சு பக்.. பக்.. என்று அடித்துகொண்டது.
அவள் கையை அவன் இறுக்கிபிடித்தான். இருவரது கண்களும் எந்த சூழ்நிலையிலும் இருவரும் பிரிந்துவிடக்கூடாது என்ற ஏக்கத்தைவெளிப்படுத்தின. கைகோர்த்தப்படி இருவரும் ஓடினார்கள். மழைதண்ணீருடன் அவளது கண்ணீர் துளிகள் கன்னத்தில் கரைபுரண்டு ஓடியது.
என்னாலத்தானே உங்களுக்கு இவ்வளவு கஷ்டம்..அவனைப்பார்த்து அவள் மெல்ல அழமுயன்றபோது அவளது வாயை அவன் பொத்தினான். ஸ்…சு..சத்தம் போடாதே..சத்தம் கேட்டா வந்திடுவாங்க..என்று ஒற்றை விரலை காட்டியபோது வீச்சரிவாள் ஒன்று மரத்தின் பின்னால் இருந்துபலிவாங்க வேகமாக வருவதை பார்த்த அவன்..உஷாராகி அவளை இழுத்துக்கொண்டு இருளான பகுதியை நோக்கி ஓடினான்.
டேய் உங்கள கொல்லாம விடமாட்டோம்..என்றபடி நான்குபேர் வீச்சரிவாளுடன் அவர்களை துரத்த..மழை சோ என்று கொட்டியபடி இருந்தது. இருட்டில் காதல் ஜோடி ஓடுவதை பேட்டரி வெளிச்சத்தில் பார்த்த அவர்கள்…கொலைவெறியுடன் துரத்தினார்கள்.
நீங்கள் உயிரோடு இருக்கக்கூடாது. உங்களை பிணமாக்கிவிட்டுத்தான் போவோம்..எங்களுக்கு கவுரம்தான் முக்கியம்..என்று கத்தினார்கள். அவர்கள் கையில் இருந்த வீச்சரிவாள்கள் அந்த இருட்டிலும் பயங்கரமாக மின்னியது.
காதல் ஜோடியை நெருங்கி வீச்சரிவாளை அவர்கள் வீச முயன்றபோது அவர்கள் குனிந்து தலைதெறிக்க ஓடினார்கள். அவர்கள் கண்ணுக்கு அந்த மர்ம மாளிகை தெரிந்தது. உயிர்பிழைத்தால் போதும் என்று அங்கே ஓடினார்கள். பின்னால் துரத்திவந்தவர்கள் தண்ணீர் நிரம்பிய ஒருபள்ளத்தில் தடுமாறி கீழேவிழுந்தார்கள். முட்டில் பலத்த அடி…ஆ..என்று முணங்கியபடி தடுமாறி எழுந்தார்கள். அதற்குள் காதல்ஜோடி தப்பி ஓடிவிட்டார்கள்.


எங்கே போயிருப்பார்கள்…இங்கேதான் இருக்கவேண்டும் என்றபடி தட்டு தடுமாறி தேடினார்கள். அவர்கள் கண்ணுக்கும் அந்த மர்ம மாளிகை தெரிந்தது. அங்கேதான் ஒளிஞ்சிருக்கணும் என்றபடி பேட்டரி வெளிச்சத்தில் முன்னேறினார்கள்.
மழை மீண்டும் வேகம் எடுத்தது. பற்களைகடித்தபடி அவர்கள் அந்த மாளிகையை நெருங்கினார்கள். அப்போது கட்டிடத்தின் மேல் பகுதி இடிந்து வாசல்பகுதியை மூடியது.

கொலைவெறியர்கள் அதிர்ச்சியுடன் பின்வாங்கினர். பழைய கட்டிடமாக இருக்கும்போல ..மழையிலே இடிந்துவிழுது.. வாசலில் விழுந்து மறைச்சிக்கிட்டு.இதை தூக்கினாத்தான் உள்ளே போகமுடியும்..தூக்குடா..முயன்றுபார்த்தார்கள். அசைக்க முடியவில்லை.
எங்கடாபோயிருப்பாங்க..உள்ளேத்தான் இருப்பாங்க..எப்படியாவது உள்ளே போய் கண்டம் துண்டமா வெட்டிபோட்டுட்டுத்தான் போகணும்…என்றவர்கள் கண்களில் ரத்தவெறி தெரிந்தது.
அப்போது சுவரின் மேற்பகுதி கொஞ்சம் இடிந்து அவர்கள் மேல்விழுந்தது. அதில் காயம் அடைந்த அவர்கள் எழமுடியமால் கீழே உருண்டார்கள். அம்மா..அப்பா..அவர்கள் முணங்கல் சத்தம் மென்மையாக கேட்டது.
மர்மமாளிகைக்குள் சென்ற காதல்ஜோடி .. இதைபார்த்து. அந்த பயத்திலும் தங்களை இறுக்கிக்கொண்டார்கள். முன்சுவர் இடிந்து விழவில்லை என்றால் அவர்கள் தங்களை வெட்டி கொன்றிருப்பார்கள் என்று நினைத்தபோது அவர்களுக்கு இதயத்தை யாரோ அழுத்துவது போலிருந்தது.
விடியட்டும்..நல்லகாலம் பிறக்கும் என்றபடி காதல் ஜோடி..குளிரில் நடுங்கினர்.
மர்மமாளிகை கட்டிடம் தனக்குள் பேசிக்கொண்டது. எழுபத்து ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இதே மாளிகையில் ஒருகாதல்ஜோடி துடிக்க துடிக்க ஒளி வெள்ளத்தில் கொல்லப்பட்டபோது.. அதை தடுக்கமுடியாம வெறுஞ்சுவராக நின்றுவிட்டோம்.
இதையடுத்து இந்த மாளிகையில் ஓவ்வொருவராக மர்மமாக சாவ.. அந்த ஜமீன் குடும்பமே அழிந்தது. பழியெல்லாம் நம்மீது விழுந்தது. ராசியில்லா மாளிகை. பேய்மாளிகை..மர்ம மாளிகை ஒவ்வொருவரையும் பழிவாங்குகிறது என்று சொன்னார்கள்.
இன்று தோள் கொடுத்து ஒருகாதல்ஜோடியை காத்திருக்கிறோம் என்று சொல்வது போலிருந்தது.
காதல்ஜோடியின் கண்களிலிருந்து கண்ணீரும் நிற்கவில்லை..மேகத்திலிருந்து மழைதுளியும் நிற்கவில்லை…!
வே.தபசுக்குமார்.புதுவை

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *