• April 28, 2024

ரயில் விபத்தை தடுத்து காக்கும் ‘கவச்’ தொழில்நுட்பம்.. அச்சமில்லா ஆனந்த பயணம்

 ரயில் விபத்தை தடுத்து காக்கும் ‘கவச்’ தொழில்நுட்பம்.. அச்சமில்லா ஆனந்த பயணம்

ரயில் விபத்துகள் அடிக்கடி நடந்து வரும் நிலையில், அதை தவிர்ப்பதற்காக உருவாக்கப்பட்ட “கவச்” தொழில்நுட்பம் எப்போது இயங்கத் தொடங்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஜீரோ ஆக்சிடெண்ட் என்பதை இலக்காக கொண்டு தயாரிக்கப்பட்ட இந்த தொழில்நுட்பம் குறித்து பார்ப்போம்.

வெளியூர் பயணங்களுக்கு கார் முதல் விமானம் வரை எத்தனை வாகனங்கள் இருந்தாலும், ரயிலில் பயணம் செய்வதே தனி சுகம். ரயில்களில் செல்வது மட்டுமல்ல, பிரமாண்ட மலைப்பாம்பு போல வளைந்து செல்வதை பார்த்து ரசிப்பது கூட ஒரு சுகம்தான். இந்தியாவிலேயே முதன்முதலில் ரயிலை பார்த்து ரசித்தவர்கள் சென்னை மக்கள் தான். சென்னை மாகாணத்தில் சாலைகள் மற்றும் கட்டடங்களை கட்டுவதற்கு தேவையான பொருட்களை சுமந்து கொண்டு 1832 முதல் ஓடத் தொடங்கியது நீராவி இஞ்ஜின் ரயில். அதைத் தொடர்ந்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் ரயில்கள் ஓடத் தொடங்கினாலும், பயணிகள் ரயில் இயக்கப்பட்டது 1853ஆம் ஆண்டுதான்.

மும்பையில் முதன்முதலாக 14 பெட்டிகளுடன் இயக்கப்பட்ட ரயிலில் மொத்தம் பயணம் செய்தவர்கள் 400 பேர். ஆங்கிலேயர் ஆட்சியில் அப்போது மீட்டர் கேஜ் பாதையில் தொடங்கிய ரயில் பயணம், இன்று புல்லட் ரயிலாக சீறிப் பாயவிருக்கிறது. நீராவியில் இருந்து நிலக்கரிக்கு மாறிய தொழில்நுட்பம், பின் டீசலை கடந்து தற்போது மின்சாரத்தில் பாய்ந்து கொண்டிருக்கின்றன ரயில்கள்.

இந்தியாவில் நாள்தோறும் 3 கோடி பேரை சுமந்து கொண்டு, 60 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தை வலம் வருகின்றன 11 ஆயிரம் ரயில்கள். கன்னியாகுமரி முதல் திப்ரூகர் வரை சுமார் 4 ஆயிரத்து 200 கிலோ மீட்டர் தூரம் பயணிக்கும் விவேக் எக்ஸ்பிரஸ் தான் அதிக தூரம் செல்லும் ரயில். பல லட்சம் மக்களையும், பல்லாயிரம் கோடி மதிப்பு பொருட்களையும் சுமந்து செல்லும் ரயில்கள் விபத்தில் சிக்குவது மிகவும் அபூர்வம்.

ஆனால், கடந்த 2 நாட்களில் தமிழ்நாட்டில் 2 ரயில்கள் விபத்தில் சிக்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை மாலையில் சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் பிரேக் பிடிக்காத மின்சார ரயில் நடைமேடையில் மோதி நின்றது. அது அகற்றப்பட்ட அடுத்த சில மணி நேரங்களில் மதுரை கூடல் நகரில் சரக்கு ரயில் பெட்டி தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இது போன்ற விபத்துகள் நடக்காமல் இருப்பதற்காகவே உருவாக்கப்பட்டிருக்கிறது கவச் தொழில்நுட்பம்.

ஜீரோ ஆக்சிடெண்ட் என்ற நோக்கத்தை மையமாக 2012 முதல் பல ஆண்டு ஆராய்ச்சிக்குப் பிறகு உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டதுதான் இந்த கவச் தொழில்நுட்பம்.  பாதுகாப்பு கவசம் என்பதன் சுருக்கமே இந்த கவச். ரயில் எஞ்ஜின், சிக்னல் அமைப்பு, ரயில் நிலையம் ஆகியவற்றில் நிறுவப்படும் கவச் தொழில்நுட்பம், ஜிபிஎஸ் மற்றும் ரேடியோ அலைவரிசை மூலம் இயங்கக்கூடியது

ரயில்கள் ஒரே தண்டவாளத்தில் வரும்போது, ஓட்டுநர்களுக்கு ஆடியோ, வீடியோ மூலம் முதலில் எச்சரிக்கை விடுக்கிறது கவச். ஓட்டுநர்களிடம் இருந்து அப்போதும் பதில் வராவிட்டால் தானாக வேகத்தை குறைத்து குறிப்பிட்ட தூரத்தில் ரயில்களை நிறுத்திவிடுவதுதான் இதன் சிறப்பம்சம். ஆபத்தில் இருக்கும்போது அனுப்பப்படும் சிக்னலுக்கு ரயில் ஓட்டுநர் செயல்பட தவறினாலும், சிவப்பு சிக்னலை தாண்டியவுடன் தானாகவே பிரேக் போடும்.

ஓட்டுநர்கள் குறட்டை விட்டு தூங்கினாலும், விழிப்போடு செயலாற்றி விபத்தை தவிர்ப்பதே இதன் நோக்கம்.  ஆந்திராவின் செகந்திராபாத் நகரில் நடத்தப்பட்ட சோதனையில் நம்பிக்கை தந்திருக்கிறது இந்த தொழில்நுட்பம்.

கவச் தொழில்நுட்பம் பொருத்தப்பட்ட இரு ரயில்களில் ஒன்றில் மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் மற்றொரு ரயிலில் ரயில்வே வாரியத் தலைவர் வி.கே.திரிபாதி பயணம் செய்தனர். ஒரே தண்டவாளத்தில் சீறிப்பாய்ந்து வந்த ரயில்கள் 380 மீட்டர் இடைவெளிலேயே நின்று நிம்மதியை கொடுத்ததோடு, தான் தயார் என்பதையும் நிரூபித்துள்ளது கவச். இந்த தொழில்நுட்பம் விரைவில் அனைத்து ரயில்களிலும் அறிமுகப்படுத்தப்படும் பட்சத்தில், அச்சமில்லாமல் அனுபவிக்கலாம் ஆனந்த ரயில் பயணத்தை.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *