• April 26, 2024

ரெயில் பயணம்… (சிறுகதை.)

 ரெயில் பயணம்… (சிறுகதை.)

தூத்துக்குடியில் இருந்து ரெயிலில் கணேசன் பயணம் செய்தான். கையில் ஒரு வார இதழை பிரித்து படித்தபடி தலை குனிந்தபடி இருந்தான்.
கைக்கடிகாரத்தை அடிக்கடி பார்த்து கொண்டான். சூட்கேஸ் மீதும் அவனது கவனம் இருந்தது. ரெயில் மின்னல் வேகத்தில் சென்று கொண்டிருந்தது. அடுத்த ரெயில் நிலையம் வந்ததும் ஒரு டிப்டாப்வாலிபரும் ஒரு பெண்ணும் கணேசன் இருந்த பெட்டியில் ஏறினார்கள். அவர்கள் கையில் ஒரு பேக் மட்டும் இருந்தது. கணேசனுக்கு எதிரே அமர்ந்தார்கள். ஆங்கிலத்தில் ஏதோ அவர்களுக்குள் பேசிக்கொண்டே வந்தனர்.

கணேசன் அவர்களை ஒருமுறை பார்த்துவிட்டு மீண்டும் வார இதழில் மூழ்கிவிட்டான். எதிரே இருப்பவர்கள் இடையில் இறங்குவார்களா இல்லை சென்னைக்குதான் செல்வார்களா என்று தெரியவில்லையே .கணேசன் ஒன்றும் புரியாமல் விழித்தான். எதிரே இருக்கும் வாலிபரிடம் கேட்கலாமா என்று நினைத்தான். அந்த வாலிபர் தன்னை பார்க்கும்போது கேட்கலாம் என்று நினைத்தான். ஆனால் அந்த வாலிபரோ…அருகில் இருந்த பெண்ணிடமே பேசிகொண்டிருந்தார்
.என்னடா..இந்த ஆளு…ஒரு நிமிடம் நம்மளை பாக்கமாட்டேங்கிறானே…அப்படி அந்த பெண்ணிடம் என்னதான் பேசுவான்னு தெரியலையே…என்று மனதுக்குள் புலம்பினான்.
டிப்டாப்வாலிபர் அவனை கண்டு கொள்ளவே இல்லை. கணேசனுக்கு எரிச்சலாக இருந்தது. லைட்டை அணைக்கலாமா…மணி இரவு பதினொன்று ஆகிவிட்டது.தூக்கம் வருகிறது…டிப்டாப்வாலிபரிடமே கேட்கலாமா…என்று நினைத்து …சார்…சார்…என்றான்.
அவருக்கு கேட்டதாக தெரியவில்லை. ரெயில் சத்தம் வேறு அதிகமாக இருந்தது. கணேசன் ஏதோ பேசவருவதை உணர்ந்த அந்த பெண்…கணேசனை பார்த்து மெல்ல புன்னகைத்தார். கணேசனுக்கு பக் என்றது. சூட்கேஸ் பத்திரம்டா…என்றது மனசு.
அந்த பெண்ணின் புன்னகைக்கு பதில் புன்னகை செய்யாமல் முகத்தை இறுக்கமாக்கி கொண்டு ரெயில் ஜன்னல் வழியாக வெளியே பார்த்தான். வார இதழால் முகத்தை மூடிக்கொண்டான்.
அவன்வார இதழில் படித்த கதையில் சூட்கேசை அபேஸ் செய்யும் பெண்ணை பற்றி போட்டிருந்தது. கணேசனுக்கு டென்சன் அதிகமாகியது.
தூங்க முடியாது போலிருக்கே…அந்த பொண்ணு பார்வையே சரியில்ல…லைட்டை அணைக்க கூடாது…என்று நினைத்தான்.மணி பனிரெண்டை நெருங்கியது.
வார இதழை மீண்டும் முதலில் இருந்து படிக்க தொடங்கினான். அப்போது அந்த வாலிபர் மெல்ல கணேசனிடம் பிளீஸ் லைட்டை அணைக்கலாமா என்று கேட்டார்.
கணேசன்…மனசு.உஷாரு…உஷாரு…என்றது. லைட்டா…இப்பமா…நான் வார இதழை படிச்சிட்டு ஆப் பண்ணிடுறன்…நீங்க வேணுமுன்னா தூங்குங்க…ஒருபத்து நிமிடம்..நான் படிச்சி முடிச்சிடுறேன் என்றான் கணேசன். சரி என்றார் டிப்டாப் வாலிபர்.
அப்போது அந்த பெண் மீண்டும் கணேசனை பார்த்து மென்மையாக புன்னகைத்தார். அதை பார்த்ததும் கணேசனுக்கு குபீரென்று வியர்த்தது .நாம ரொம்ப கவனமா இருக்கணும்..சூட்கேஸ் பத்திரம் என்றது மனசு.கணேசன் படபடப்புடன் இருப்பதை பார்த்த டிப்டாப் வாலிபர் நீங்க எங்கே இறங்கணும் என்று கேட்டார்.
கணேசன் பதில் சொல்லவா வேண்டாமா என்று விழித்தான். நம்ம எங்கே போனா… என்ன..அதை ஏன் கேட்கிறார். நாம இறங்குவதற்குள் நம்ம சூட்கேசை அடிச்சிடணமுன்னு பாக்கிறாங்களா…நமக்கிட்ட முடியுமா…என்ற கணேசன் கீழே இருந்த சூட்கேசை எடுத்து மடியில் வைத்துகொண்டான். அதை பார்த்த டிப்டாப்வாலிபர் சிரித்தபடி என்னங்க…சூட்கேசை மடியிலே வச்சிருந்தியன்னா எப்படி தூங்குவீங்க..சூட்கேசில…முக்கியமா எதுவும் வச்சிருக்கீங்களா.என்று கேட்டார்.
கணேசனுக்கு கோபம்வந்தது. நான் தூங்கினா என்ன தூங்காட்டி என்ன…நான் சூட்கேசில என்னவச்சிருக்கேன்னு…இவருக்கு என்ன அக்கறை….என்று மனதுக்குள் திட்டினார்.
டிப்டாப் வாலிபர் மெல்ல…நாங்க தாம்பரத்திலே இறங்கிடுவோம். நீங்க எங்க இறங்கபோறீங்க…என்று கேட்டார். கணேசன் உடனே..நானும் அங்கேதான் என்று ஒரு பொய்யை சொன்னார். கணேசன் இப்போதைக்கு லைட்டை அணைக்கமாட்டார் என்று தெரிந்ததால் டிப்டாப்வாலிபர் மிடில் பர்த்தில் ஏறி படுத்தார்.
ஒரு மஞ்சள் நிற பேக்கை தன் தலைக்கு அருகில் வைத்து கொன்டார்.அந்த மஞ்சள் நிற பேக்கை கணேசன் கூர்மையாக பார்த்தான். அந்த பெண் கணேசனை பார்த்து சிறிய புன்னகை பூத்துவிட்டு…கீழே உள்ள பர்த்தில் படுத்து கொண்டார்.
சிறிது நேரத்தில் அவர்கள் நன்றாக தூங்குவது தெரிந்தது.கணேசனுக்கும் தூக்கம் வந்தது.வேறு வழி இல்லை.லைட்டை அணைத்தான். தலைக்கு அடியில் சூட்கேசைவைத்து கொண்டு கண்களை லேசாக மூடியபடி கீழே உள்ளபர்த்தில் படுத்தான்.சிறிது நேரம் தூங்காமல் இருந்தான்.பின்னர் அவனை அறியாமல் தூங்கிவிட்டான்.ரெயில் மின்னல் வேகத்தில் சென்றது.
இடையில் ரெயில் நிலையங்களில் நின்றுவிட்டு ரெயில் சென்னையை நோக்கி விரைந்தது.விடிந்தது. எழும்பூர் ரெயில் நிலையத்தை ரெயில் வந்தடைந்தது. ரெயில் நிலையத்தில் வந்த சத்தத்தை கேட்டு கணேசன் கண்விழித்தான். ஆ…எக்மோர் வந்துட்டா…என்றவன் தன்தலைக்கு அடியில் சூட்கேஸ்பத்திரமாக இருப்பதை பார்த்து அப்பாட…சூட்கேஸ் தப்பியது என்று நினைத்தான்.
அதை திறந்து…பார்த்தான். ஐநூறு ரூபாய் மற்றும் அவன் படிப்பு சர்டிபிகேட் இருந்தது. சென்னையில் ஒரு நிறுவனத்தில் வேலைதேடி இண்டரவியூக்கு வந்திருந்தான். இந்த சூட்கேசை அபேஸ் பண்ண அந்த டிப்டாப் வாலிபரும் அந்த பெண்ணும் என்னவெல்லாம் முயற்சி பண்ணுனாங்க. எனக்கு இந்த சர்டிபிக்கெட்டும் ஐநூறு ரூபாயும் தான்பெரிசு…என்றபடி சூட்கேசுடன் எழுந்தான்.
அப்போதுதான் எதிரே இருந்த டிப்டாப் வாலிபர் படுத்திருந்த மிடில்பர்த்தில் மஞ்சள்நிற பேக் கிடந்து. அந்த வாலிபர் மறதியில் விட்டு சென்றது தெரிந்தது. என்ன இப்படி பையை விட்டுட்டு போயிருக்காரு என்றபடி அந்த பேக்கை எடுத்து திறந்து பார்த்தார்.அதில் கத்தை கத்தையாக பணம் இருந்தது. இரண்டு லட்ச ரூபாய் இருக்கும்.
கணேசனுக்கு தூக்கிவாரிப்போட்டது. மஞ்சள் பைக்குள் ஒருவிசிட்டிங் கார்டு ஒன்று இருந்தது .அதில் இருந்த போன் நம்பர் மற்றும் அட்ரசை பார்த்தான்.அவனை யாரோ தலையில் சம்மட்டியால் அடிப்பது போலிருந்தது. நம்ம ஐநூறு ரூபாயை சூட்கேசில வச்சிக்கிட்டு டிப்டாப் வாலிபரும் அந்த பெண்ணும் அதை தூக்கிட்டு போயிடுவாங்கன்னு சந்தேகப்பட்டுவிட்டோமே…என்று நினைத்தவன் விசிட்டிங் கார்டில் இருந்த டிப்டாப் வாலிபரின் செல்போன் நம்பருக்கு போன் செய்தான்….
எதிர்முனையில் டிப்டாப்வாலிபர் பேசினார். உங்களை தப்பா நினைச்சிட்டோம்…மன்னிச்சிடுங்க…என் தங்கை திருமண செலவுக்காக கொண்டு சென்ற இரண்டு லட்சம் ரூபாயை வாங்கிக்கிறேன் என்று சொன்னபோது அவர் நாக்கு தழுதழுத்தது.

வே.தபசுக்குமார்.தூத்துக்குடி.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *