• May 15, 2024

கோவில்பட்டியில் தேசிய ஜூனியர் ஆக்கி : முதல் நாளில் சத்தீஸ்கரை வீழ்த்திய தமிழ்நாடு

 கோவில்பட்டியில் தேசிய ஜூனியர் ஆக்கி : முதல் நாளில் சத்தீஸ்கரை வீழ்த்திய தமிழ்நாடு

கனிமொழி எம்.பி,.யுடன் தமிழ்நாடு அணி வீரர்கள் ‘செல்பி’

கோவில்பட்டி கிருஷ்ணா நகர் அரசு செயற்கை புல்வெளி மைதானத்தில் 12-வது தேசிய ஜூனியர் ஆக்கி போட்டி நேற்று தொடங்கியது. 28-ந்தேதி வரை நடக்கும் இந்த போட்டிகளில் மொத்தம் 3௦ மாநில அணிகள் பங்கேற்கின்றன,
தொடக்க நாளான நேற்று காலையில் 3 ஆட்டங்கள் நடந்தன. முதல் போட்டியில் பீகார்- அசாம் அணிகள் மோதின. ஆட்டம் தொடக்கத்தில் இருந்து பீகார் அணியின் ஆதிக்கம் அதிகம் இருந்தது. அவர்களின் ஆட்டத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் அசாம் அணி வீரரகள் திணறினார்கள்

பீகார் அணி வீரர்கள் அடுத்தடுத்து கோல்கள் போட்டு ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றனர், இறுதியில் 11 – 1 என்ற கோல் கணக்கில் பீகார் அணி வெற்றி பெற்றது. அந்த அணியின் வீரர் மோனோகுமார் சிறந்த ஆட்டக்காரராக தேர்வு செய்யப்பட்டார்.
பின்னர் நடந்த 2-வது ஆட்டத்தில் ஜம்மு காஷ்மீர்- அருணாசலபிரதேசம் அணி கள் சந்தித்தன. அருணாசல பிரதேச அணி வீரர்கள் அபாரமாக ஆடினார்கள். அவர்கள் 5 கோல்கள் அடித்தும் பதிலுக்கு ஜம்மு காஷ்மீர் அணி ஒரு கோல் போடமுடியவில்லை.
இதனால் இதில், 5 – 0 என்ற கோல் கணக்கில் அருணாசல பிரதேசம் அணி வெற்றி பெற்றது. அந்த அணியை சேர்ந்த லவ்பிரீத் சிங் சிறந்த ஆட்டக்காரராக தேர்வு செய்யப்பட்டார்.
தொடர்ந்து நடைபெற்ற 3-வது ஆட்டத்தில் கோன்ஸ்- ஜார்கண்ட் அணிகள் களம் கண்டன. ஆட்டம் தொடக்கம் முதல் இறுதி வரை ஜார்கண்ட் அணி வீரர்கள் கட்டுப்பாட்டில் மைதானம் இருந்தது என்றே சொல்லலாம். தொடர்ந்து கோல்கள் போட்டபடி இருந்தனர். எதிர் அணியினரால் ஒரு கோல் கூட போடமுடியவில்லை. இறுதியில் 10 – 0 என்ற கோல் கணக்கில் ஜார்கண்ட் அணி வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில், ஆசிம் டர்க்கி சிறந்த ஆட்டக்காரராக தேர்வு செய்யப்பட்டார்.

தொடக்கவிழாவில் நடந்த கலைநிகழ்ச்சி


மாலையில் தொடக்க விழா நிகழ்ச்சிகள் நடந்தன. விழாவுக்கு கனிமொழி எம்.பி. தலைமை தாங்கினார். அமைச்சர் பெ. கீதாஜீவன், மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன், 12-வது தேசிய ஜூனியர் ஆக்கி போட்டி ஒருங்கிணைப்பு குழு துணைத் தலைவர் கே.ஆர்.அருணாச்சலம், ஆக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு தலைவர் சேகர் ஜெ. மனோகரன், நகர்மன்றத் தலைவர் கா.கருணாநிதி, திமுக ஒன்றிய செயலாளர் முருகேசன், தூத்துக்குடி மாவட்ட ஆக்கி கழக செயலாளர் குரு சித்ர சண்முக பாரதி உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடக்க விழாவை முன்னிட்டு கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன, இதனை கனிமொழி, கீதாஜீவன் உள்ளிட்டோர் ரசித்து பார்த்தனர்.

சத்தீஸ்கர் அணி வீரர்கள் அறிமுகம்


விழா முடிந்ததும் மாலையில் இரண்டு போட்டிகள் நடைபெற்றன. ரசிகர்கள் ஆரவாரத்துடன் தொடங்கிய முதல் ஆட்டத்தில் தமிழ்நாடு அணியும், சத்தீஸ்கர் அணியும் மோதின.
இரு அணி வீரர்களும் சம பலத்துடன் இருந்ததால் ஆட்டம் சூடு பிடித்தது. ரசிகர்களின் ஆதரவு தமிழ்நாடு அணிக்கு இருந்ததால் அவர்கள் கரகோஷம் எழுப்பி உற்சாகப்படுத்தினார்கள்.

தமிழ்நாடு அணி வீரர்களுடன் கனிமொழி, கீதா ஜீவன் .


பரபரப்பான இந்த போட்டியில் தமிழ்நாடு அணி 3 கோல்கள் அடித்தன. எதிர் அணியால் ஒரு கோல் மட்டுமே போட முடிந்தது, இதனால் 3 – 1 என்ற கோல் கணக்கில் தமிழ்நாடு அணி வெற்றி பெற்றது. சிறந்த ஆட்டக்காரராக தமிழ்நாடு அணி வீரர் சதீஷ் தேர்வு செய்யப் பட்டார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *