• April 27, 2024

ராங் நம்பர்… (சிறுகதை

 ராங் நம்பர்… (சிறுகதை

வெயில்…கடும் வெயில்…வியர்வை வழிந்தது..
பலவேசம்…இஸ்சு…புஸ்சு என்று மூச்சுவாங்கினார்.

இரவு வீடே..அனலாக கொதித்தது.. மின்விசிறி ஓடியும்.. இதமான காற்றுவரவில்லை.
பலவேசம்.. வீட்டுக்குள்ளே சுற்றி சுற்றி வந்தார்.
இந்த வெப்பத்தில் எப்படி படுத்து தூங்குவது.. அவர் புலம்பிக்கொண்டிருந்தார். அதைப் பார்த்த அவரது மனைவி கண்மணி…என்னங்க..சுத்தி சுத்தி வர்ரீங்க…மூணு நாளைக்கு அனல்காற்று வீசுமாம்..வெப்பம் அதிகமாக இருக்கும் என்று சொல்லுறாங்க…பேசாம ஜன்னலை திறந்துவையுங்க..காத்துவரட்டும் என்றார்.
அதை கேட்டதும் பலவேசம்…என்ன நீ அப்படி சொல்லுற..கதவை திறந்துவை கள்ளன் வரட்டும் என்று சொல்வதுபோல் உள்ளது…ஜன்னல்கதவை திறந்துவச்சா கம்பிபோட்டு எல்லாத்தையும் தூக்கிட்டு போயிடுவாண்டி..சும்மா கிட என்று கோபத்தில் எகிற கண்மணியோ.. .ஏங்க..இந்த வெக்க நேரத்தில எவனும் வரமாட்டான்…பேசாம ஜன்னலை திறந்துவையுங்க..எனக்கு மூச்சு முட்டுது..என்றார்.

பலவேசமும்..எனக்கும் தாண்டி மூச்சு முட்டுது..நீ சொல்லுறீயன்னு ஜன்னல்கதவை திறந்துவைக்கிறேன். நீ உள்ளேபோய்படு.. நான் ஜன்னல்பக்கத்திலே வெளியே படுத்துக்கிறேன் என்க ..கண்மணி மெல்ல..கொசுகடிக்குங்க…தூக்கம் வந்தவுடன் உள்ளேவந்திடுங்க..கொசுவத்தி கொளுத்தி வச்சிடுறேன் என்றார்.
பலவேசம் புழுக்கம் தாங்காமல் ஜன்னல் கதவுகளை திறந்துவைத்தார்…ஆ..கொஞ்சம் காத்துவரத்தான் செய்யுது…பரவாயில்ல…ஆனா..ஜன்னல்வழியா..கம்பிபோட்டானா..என்னசெய்யுறது..முக்கியமான பொருளை எல்லாம்…ஜன்னலில் இருந்து வெகு தூரத்தில் வைத்து துணியால் மூடினார்.
எதுக்கும் பாதுகாப்பாக ஒருகம்பு இருக்கட்டும் என்று எடுத்துவைத்துக்கொண்டார். திருடன் வந்துட்டான்னா என்னசெய்யுறது…செல்போனை பக்கத்தில் வச்சுக்குவம்.. உடனை போலீசுக்கு சொல்லிடலாம்…என்று நினைத்தவர் ஜன்னலை விட்டு நான்கடி தூரத்தில் பாய்விரித்துபடுத்தார்.
கொசு..விமானபடைபோல்..சொய்ங் சொய்ங் என்று பறந்துவந்து பலவேசத்தை கடித்தது.ம்.. காற்றைத்தான் வரச்சொன்னோம்…இந்த கொசு எப்படி வந்தது..இந்த தொந்தரவு தாங்கமுடியலையே…என்றபடி முதுகில் ஓடிய கொசுவை..படார்…படார்..என்று அடித்தார்.
உள்ளறையில் படுத்திருந்த அவர்மனைவி…ஏங்க லைட்டை அணைச்சிட்டு வாங்க என்க…பலவேசம் கொசு கடித்த ஆத்திரத்தில்…நீ..தங்கசங்கிலி போட்டிருக்க…பேசாம உள்ளபடு..நான் இரண்டு மணிக்கு மேல வர்ரேன்..என்றார். எப்படியும் போங்க..லைட்டை அணையங்க என்றபடி கொட்டாவிவிட்டார் கண்மணி.
உடனே..பலவேசம்..லைட்டை அணைத்துவிட்டு…ஜன்னல் பக்கத்தைபார்த்தபடி…பாயில்படுத்தார்.
தூக்கம்வரவில்லை.வியர்த்தது.என்னடா..இது படுத்தா வியர்க்குது..உட்கார்ந்திருந்தா..காற்றடிக்குது..என்றபடி சுவரில் சாய்ந்து உட்கார்ந்தார். சிறிது நேரத்தில் தூக்கம் அவர் கண்களை தழுவியது…
இரவு பதினோரு மணி இருக்கும்…வெறும் ஜட்டி மட்டும் அணிந்திருந்த திருடன் முகத்தில் முகமூடி அணிந்தபடி அங்கு வந்தான். கையில் நீளகம்பி..இருந்தது.அடடா…ஜன்னல் திறந்தே இருக்கே…சூப்பர்..அப்படியே கம்பியை உள்ளே நீட்டி பொருட்களை எடுத்துவிடலாம்..என்று எண்ணினான்.தனது செல்போன்வெளிச்சத்தில் ஜன்னல்வழியாக உற்றுப்பார்த்தான்.
பலவேசம் சுவரில் சாய்ந்தபடி தூங்கிக்கொண்டிருந்தார்.அவர் அருகில் மேஜையில் செல்போன் மின்னியது. ஆ..ஒண்ணு சிக்கிச்சு என்றபடி கொள்ளையன் இரும்பு கம்பி முனையில் சிறிய பையை தொங்கவிட்டபடி ஜன்னல்வழியாக.. உள்ளே நீட்டினான். மேஜையை கம்பி நெருங்கியபோது…பலவேசத்தின் செல்போன் ஒலித்தது. தூக்கத்தில் இருந்த பலவேசம்…செல்போன் தொடர்ந்து ஒலிப்பதை கண்டு..யாரு.. இந்த நேரத்திலே…பேசுறது..விளங்காதவங்க என்றபடி செல்போனை எடுத்து ஹலோ என்றார்.எதிர்முனையில் பேசியவர்..சந்துரு இருக்காங்களா…கடன்வாங்கினாரு..இன்னும் தரல..அவரை கொஞ்சம் கூப்பிடுங்க..என்றார்.
அதைகேட்ட பலவேசம்..ஏங்க..இங்கு சந்துரும் இல்ல..பந்துரும் இல்ல…ராங்நம்பர் வையுங்க என்று கத்திவிட்டு இணைப்பை துண்டித்தார்.
செல்போனை மீண்டும் மேஜையில்வைத்துவிட்டு..என்ன தொந்தரவு அய்யா..தூங்கவிடமாட்டேங்கிறாங்க…என்று ஏசிவிட்டு சுவரில் சாய்ந்து கொண்டார். திருடன் கம்பியை உள்ளே நீட்டியிருப்பது இருட்டில் பலவேசத்துக்கு தெரியவில்லை. திருடனும் செல்போன் வெளிச்சத்தை ஆப் பண்ணிட்டு மறைந்து நின்று கொண்டான்.
சந்துரு என்று கேட்டு வந்த செல்போன் குரலையும் உற்றுக்கேட்டான். ஒரு பதினைந்து நிமிடம் கழித்து..திருடன் மீண்டும் மேஜையில் இருந்த செல்போனை கம்பி மூலம் எடுக்க முயன்றபோது மறுபடியும் அந்த செல்போன் ஒலித்தது. திருடனுக்கு செம எரிச்சல்.. சுவரில் ஒதுங்கி நின்றான்.
பலவேசம் ஆத்திரத்துடன் எழுந்தார்.எவன் இந்த நேரத்திலபேசுறது.. இன்னைக்கு அவனை உண்டு இல்லைன்னு பண்ணிடவேண்டியதுதான் என்று கோபத்தில் செல்போனை எடுத்து…ஹலோ.யாருங்க பேசுறது என்று கேட்டார்.
எதிர்முனையில் பேசியவர்..ஏங்க..சந்துரு இருக்காங்களா..பணத்தைவாங்கிட்டு ஏமாத்திட்டாரு…அவரை கூப்பிடுறீங்களா என்று சொல்ல..பலவேசத்துக்கு கோபம் தலை உச்சிக்கு ஏறியது..ஏய்யா..இங்கே சந்துரு யாருமல்ல ராங் நம்பருன்னு பதினைந்து நிமிடத்துக்கு முன்னாலத்தான சொன்னேன்..மறுபடியும் வந்து கேட்கிற…உனக்கு அறிவு இருக்கா..முண்டம் என்று திட்ட எதிர்முனையில் பேசியவர் ..கோபப்படாதீங்க..சந்துரு இந்த நம்பரைத்தானே கொடுத்துது..
நீங்க இல்லங்குது..உன் பெயர் என்ன என்று கேட்டார்.உடனே பலவேசம் ஆவேசமாக ஏன் பெயரை ஏன் சொல்லணும்..இந்த பலவேசம் ஒண்ணும் இளிச்சவாயன் இல்ல..புரிஞ்சுக்கோ..என்றார்.
எதிர்முனையில் பேசியவர்..என்ன பலவேஷமா போடுற…சந்துருவை நீ ஒளிச்சு வச்சிருக்க…நான் போலீசுக்கு போகும்..உன்னை ஜெயிலில் தள்ளும்…என்று அடுக்கிக்கொண்டே போக..போடா ராங் நம்பர் என்று பலவேசம் செல்போனை சுவிட்ச்ஆப் செய்தார்.
யாருய்யா இந்த சந்துரு…நம்ம உயிரை வாங்குறான்…ராங்நம்பர்..ராங் நம்பர்..நம்மளை ஜெயிலுக்குள் தள்ளுவானாமுல்ல…நான் சுவிட்ச் ஆப் பண்ணிட்டேன் இனி எப்படி பேசுவான்..பாப்போம்..என்ற பலவேசத்துக்கு மூச்சுவாங்கியது..சுவிட்ஆப்செய்யப்பட்ட செல்போனை மேஜையில்வைத்தபடி சுவரில் சாய்ந்தார்.
திருடனுக்கோ..செமகோபம் ஒருசெல்போனை திருடமுடியல..செல்போன் பேசுறதுக்கு நேரம் காலம் கிடையாதா…முட்டாப்பயல்வ என்றபடி மீண்டும் மேஜையில் இருந்த செல்போனை தூக்க…கம்பியை லாவகமாக நீட்டி தூக்கியபோது மறுபடியும் செல்போன் ஒலித்தது.
திருடனுக்கு ஒன்றும் ஓடவில்லை.யார் செல்போன் இந்த நேரத்தில்…என்று சுற்றும் முற்றும் பார்த்தபோது திருடனின் செல்போனே ஒலித்தது.நண்பர் யாரோ பேசுகிறார் என்று நினைத்து மென்மையாக..ஹலோ..என்றான்.எதிர்முனையில்பேசியவர்..ஏங்க சந்துரு இருக்காரா..ஏங்கிட்ட பணம்வாங்கிட்டு ஏமாத்திட்டாரு. அவர்இருந்தா கூப்பிடுங்க…என்க திருடன்..அய்யோ..அய்யோ..இது என்ன அநியாயம்..அவர் செல்போனை சுவிட்ஆப் செய்தவுடன்…என் செல்போனுக்கு வந்திட்டானே..யாருய்யா..சந்துரு…ராங்நம்பர் ராங்நம்பர் என்று சொல்லி இணைப்பை துண்டித்தான்.
அங்கே பலவேசம் எழுந்து என்ன சத்தம் என்றபடி ஜன்னலை பார்த்தார். திருடன் தப்பித்தால் போதும் என்று அவனது செல்போனுடன் அங்கிருந்து ஓட்டம் பிடித்தான்.இருட்டில் எதுவும் தெரியாததால் பலவேசம் எந்த பிரச்சினையும் இல்லை என்று நினைத்தபடி பாயில் படுத்து தூங்கினார்.காலையில் எழுந்துபார்த்தபோது…ஜன்னல்வழியாக செல்போனை திருட வந்த திருடன் விட்டுசென்ற கம்பியை பார்த்து…விழிபிதுங்கி நின்றார்.சுவிட்ஆப்செய்யப்பட்ட செல்போனை ஆன் செய்தபோது…ஏங்க சந்துரு இருக்காங்களா…இருந்தா அவரிடம் போனை கொடுங்க….என்ற குரல் எதிர்முனையில் ஒலித்தது.ஆ…ராங் நம்பர்..ராங் நம்பர் என்று அவர் கத்தியது கேட்டு ஓடிவந்தார் அவர்மனைவி.ஒரு ராங் நம்பர்தான் அவர் செல்போனை காப்பாற்றியது என்பதை அவர் புரிந்துகொள்ள வெகு நேரமாகியது.
வே.தபசுக்குமார்.புதுவை.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *