• March 29, 2024

வளமான வாழ்க்கைக்கு குலதெய்வம் வழிபாடு

 வளமான வாழ்க்கைக்கு குலதெய்வம் வழிபாடு

நம் குலத்தினை காக்கும் தெய்வம் குலதெய்வம் ஆகும். தெய்வங்களில் மிகவும் வலிமையான தெய்வம் குலதெய்வம் .

குலதெய்வம் என்பது நமது முன்னோர்களில் தெய்வமாக மாறிவிட்ட புண்ணிய ஆத்மாக்கள்.
அந்த புனித ஆத்மாக்கள் தங்களின் குலத்தினை சார்ந்தவர்களை கண்ணும் கருத்துமாக பேணிக் காக்கும் வல்லமை படைத்தவை. எனவே தான் அந்த தெய்வங்கள் “குலதெய்வங்கள்” என்று சிறப்புடன் அழைக்கப்படுகின்றன.
குலதெய்வங்கள் பொதுவாக காடு, மலை, வயல் மற்றும் சாலை வசதி இல்லாத இடங்களில் தான் அமைந்திருக்கும். பெரும்பாலும் கிராமங்களை ஒட்டியே இவ்வகை தெய்வங்களின் வழிபாட்டிடம் இருக்கும்.
குலதெய்வ கோயில்கள் பெரிய அளவில் கோபுரங்களை கொண்டிருப்பதில்லை. சிறிய கோவில் அமைப்பாகத் தான் இருக்கும். இவ்வகை கோவில்கள் முறைப்படி அமைக்கப்பட்டிருக்காது. அந்தந்த இடத்திற்கு ஏற்றாற் போல் இருக்கும்.
இவை பெரும்பாலும் கிழக்கு அல்லது வடக்கு திசை நோக்கியே அமைந்திருக்கும். பெரும்பாலும் வேம்பு அல்லது வில்வ வகை மரங்கள் குலதெய்வ கோவில்களில் இடம் பெற்றிருக்கும்.
திருமணம், வீடு கட்டுதல் போன்ற விசேஷங்களின் போது முதலில் குல தெய்வத்தை வழிபட்ட பின் வேலைகளை ஆரம்பிக்கின்றனர். பிறந்த குழந்தைக்கு முதல் மொட்டை போடுதல், காது குத்துதல் போன்ற நிகழ்ச்சிகள் குல தெய்வக் கோயில்களிலே நடைபெறுகின்றன. திருமணம், புதுமனை புகுவிழா, தொழில் தொடங்கும் விழா போன்றவற்றின் அழைப்பிதழ்களை குல தெய்வத்திடம் வைத்து முதலில் வழிபாடு நடத்திய பின்பே எல்லோருக்கும் அழைப்பிதழ் வழங்கப்படுகின்றன.
சுப நிகழ்ச்சிகளின் போது குல தெய்வத்தை நினைத்து காணிக்கையை ஒரு மஞ்சள் துணியில் கட்டி வைத்து குலதெய்வம் கோயிலுக்கு செல்லும் போது செலுத்திவிடுகின்றனர்.
காணிக்கை அளித்தல், தீ மிதித்தல், தீச்சட்டி எடுத்தல், தொட்டில் கட்டுதல் போன்ற நிகழ்ச்சிகளும் குலதெய்வ கோயில்களில் நடத்தப்படுகின்றன.
வழிபாட்டின் போது கரகாட்டம், தெருக்கூத்து ஆகியவற்றின் மூலம் குலதெய்வ வரலாறு விளக்கப்படுகிறது. குலதெய்வ வழிபாட்டினை மேற்கொள்வது பற்றி குறி கேட்டல், உத்தரவு கேட்டல் போன்ற நிகழ்ச்சிகள் உள்ளன.

குலதெய்வ வழிபாட்டினை மேற்கொள்வதால் தங்கள் குடும்பத்துக்கும், உறுப்பினர்களுக்கும் எவ்வித தீங்கும் ஏற்படாது, வளமான வாழ்க்கை கிடைப்பதாக மக்கள் கருதுகின்றனர். குலதெய்வ வழிபாடில்லாமல் தொடங்கும் எந்த ஒரு செயலும் நன்றாக முடிவதில்லை. எனவே இவ்வழிபாடு எல்லாவற்றிலும் முதன்மையானது என்ற நம்பிக்கை மக்களிடம் நிலவுகின்றது.
எந்த ஒரு நல்ல காரியத்திற்கும் முதல் வழிபாடு குலதெய்வத்திற்கு நடைபெறும். குலதெய்வத்தை மறப்பது பெற்றோரை மறப்பது போன்றது.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *