• March 28, 2024

உங்கள் குலதெய்வம் யார் என்று தெரியவில்லையா? என்ன செய்யவேண்டும்…?

 உங்கள் குலதெய்வம் யார் என்று தெரியவில்லையா? என்ன செய்யவேண்டும்…?

முன் காலத்தில் சில கிராமப்புறங்களில் இருந்த பிராமணர்களுக்கு தமது குல தெய்வம் யார் என்று தெரியாமல் இருந்தபோது அவர்கள் நதியில் குளித்து விட்டு பூமியில் இருந்து ஒரு பிடி களி மண்ணை எடுத்து வருவார்கள். வீட்டிற்கு வந்து அதை பிள்ளையார் பிடிப்பதை போல பெரியதாக பிடித்து மஞ்சள் குங்குமம் இட்டு அதையே தமது குலதெய்வமாக வணங்கி பூஜிப்பார்கள்.
குல தெய்வம் யார், அது ஆணா, இல்லை பெண்ணா என்பது என்பது தெரியாததினால் உருவமற்ற அதை ஒரு பீடத்தில் சந்தனத்தினால் ஒரு கட்டம் போட்டு அதில் விபூதி மற்றும் மஞ்சள், குங்குமத்தை தூவி களி மண்ணால் செய்த பிள்ளையார் பிடியைப் போன்ற அந்த குலதெய்வ களிமண் தெய்வத்தை அதன் மீது வைத்து அதையே தமது குல தெய்வமாக எண்ணி பூஜை செய்வார்கள்
விபூதியையும், மஞ்சள் மற்றும் குங்குமத்தையும் தூவுவது எதற்காக என்றால் குல தெய்வம் யார், அது ஆணா, இல்லை பெண்ணா என்பது தெரியாததினால். ஆண், பெண் என்ற இருவருக்கும் பொருந்தும் வகையில் ஆண் குல தெய்வமாக இருந்தால் சந்தனம் மற்றும் விபூதியையும், பெண் குல தெய்வமாக இருந்தால் சந்தனம் மற்றும் குங்குமத்தையும் இடுவதான ஐதீகம் கொண்டு அதை செய்வார்கள் .
பூஜை முடிந்ததும் பூஜை அறையில் அந்த களிமண் பிடியை தமது குல தெய்வமாக கருதிக் ஸ்வாமி பீடத்தில் பத்திரமாக பாதுகாப்பாக உடையாமல் வைத்து விடுவார்கள். அதையே குல தெய்வமாக வணங்கி வரும்போது ஒரு கட்டத்தில் நிச்சயமாக அவர்களுடைய குலதெய்வம் அவர்கள் கனவிலோ அல்லது யார் மூலமாகவோ வந்து அவர்களுக்கு தன்னை அடையாளம் காட்டிக் கொள்ளும். இது சத்தியமான உண்மையாகவே இருந்தது
பூமியில் இருந்து எடுத்த களி மண்தானே என அதை அலட்சியப்படுத்தி விடக் கூடாது. எப்போது அந்த மண் பிடியை குல தெய்வத்தின் உருவம் என்று கருதி பூஜிப்போமோ அப்போதே அதில் நம்மை அறியாமல் நம்முடைய குல தெய்வங்கள் வந்து குடியேறும். ஆகவே அதை தமது குல தெய்வம் அடையாளம் தெரியும் வரை பத்திரமாக, உடையாமல் பாதுகாத்து வர வேண்டும். தேவை என்றால் தெய்வங்களை வைத்து உள்ள இடத்திலோ, பூஜை அறையிலோ ஒரு சிறிய பிளாஸ்டிக் பெட்டியிலாவது வைத்து அதை பத்திரமாக வைத்து பாதுகாக்க வேண்டும். மேலும் அதற்கு தினமும் ஒரு பூவாவது, அது முடியவில்லை என்றால் அதன் பீடத்தில் சிறிது குங்குமத்தையாவது தூவி ‘ குல தெய்வமே, எனக்கு உன்னை அடையாளம் காட்டுவாயா’ என பிரார்த்தனை செய்து வணங்கி வர வேண்டும். வேறு எந்த பூஜையும் செய்யத் தேவை இல்லை.
ஆனால் நிச்சயமாக அவரவர் பிராப்தம் போல எப்போது அவர்களுக்கு தன்னைப் பற்றிய விவரம் தெரிய வேண்டும் என்ற கட்டாயம் ஏற்படுமோ அப்போது அவர்களுக்கு குல தெய்வம் தன்னை அடையாளம் காட்டிக் கொள்ளும் என்பதில் சற்றும் சந்தேகம் கிடையாது. எப்போது அவர்கள் தமது குல தெய்வத்தை அடையாளம் கண்டு கொள்கின்றார்களோ அதன் பின் அவர்கள் எப்போது அந்த ஆலயத்துக்கு செல்வார்களோ அப்போது தமது குல தெய்வமாக வணங்கி வந்த மண் பொம்மையை எடுத்துக் கொண்டு அந்த ஆலயத்தில் குல தெய்வத்தை வணங்கிய பிறகு ஆலய ஸ்தல விருஷத்தின் கீழ் அல்லது ஆலயத்திலேயே ஏதாவது ஒரு மூலையில் அந்த பொம்மையை வைத்துவிட்டு வருவார்கள். அல்லது ஆலயத்தில் குளம் இருந்தால் அந்த நீரில் அதைப் போட்டு விட்டு வருவார்கள்’.

ஏழேழு ஜென்மம்

சாதாரணமாக ஏழேழு ஜென்மங்களுக்கும் குலதெய்வம் குடும்பங்களைக் காப்பாற்றும் என்பது பெரிய நம்பிக்கை. ஏழேழு ஜென்மம் என்பது 7×7 அதாவது 49 ஜென்ம ஆண்டுகள் என்பது ஒரு கணக்கு. 49 என்பதின் கூட்டுத் தொகை 4+9 = 13 . இந்த எண்தான் ஒருவருடைய வம்சத்தை நிர்ணயிக்கும் முக்கியமான எண்.
ஒருவர் இறந்து விட்டால் பதிமூன்றாம் நாள் அன்று கிரேக்கியம் என்ற நல்ல காரியத்தை செய்வது பழக்கம். அன்றுதான் உடலை விட்டு வெளியேறிய ஆத்மா சொர்கத்தை அடைகின்றது என்று நம்புகிறோம்.
அது போலத்தான் இறுதிக் காலமாக 13 என்ற அந்த காலத்தை குறிக்கும் விதத்தில் 49 ஜென்ம காலமான 13 ஜென்மத்துடன் ஒரு வம்சம் முடிவடைகிறது என்று நம்பப்படுகிறது .
அதாவது எந்த ஒரு வம்சத்திலுமே 13 வம்சாவளியினருக்கு மேல் வணங்கும் குல தெய்வம் இருக்க முடியாது என்பது தெய்வ கணக்கு. ஏதாவது ஒரு கட்டத்தில் அந்த வம்சத்தில் வழி வழியாக வந்தவர்களின் வம்சத்தினருக்கு குழந்தைப் பேறு இல்லாமலோ, அகால மரணங்களினாலோ, ஆண் வம்ச விருத்தி அடையாமலோ அல்லது ஏதாவது காரணத்தினால் வம்சம் அழிந்து விடும். ஆகவே ஏழேழு ஜென்மங்களுக்கு மேல் எந்த வம்சத்தினரும் இருக்க மாட்டார்கள். ஆகவே ஒரு வம்சத்தின் குல தெய்வம் என்பது 13 ஜென்மத்துக்கு – வம்சாவளிகளுக்கு மட்டுமே தொடர்ந்து கொண்டு இருக்கும் என்று கூறுகிறார்கள்.

ஒருவருக்கு பிறந்த மகன், அவனுக்குப் பிறந்த மகன், அவனுக்குப் பிறந்த மகன் என ஆண் குழந்தை மட்டுமே வம்சத்தில் கணக்கில் வரும். ஒருவருடைய சராசரி வயது 50 என்றால் கூட அவருடைய தாத்தாவின், தாத்தாவின் பெரும் தாத்தாவின் காலம் என 13 ஜென்மங்களுக்கு முந்தய காலம் எனக் கணக்கிட்டால் 13 x 50 = 650 ஆண்டுகள் என வரும்.
யாருக்காவது 650 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த அவர் சந்ததியினர் யார் என்பது தெரியுமா? அதை விட சிறிய கேள்வி, யாருக்காவது அவர்களுடைய குடும்பத்தில் 13 ஆம் வம்சத்தின் பெரிய தாத்தா யார் என்பது தெரியுமா? இதையெல்லாம் யார் குறித்து வைத்துக் கொண்டு வருகிறார்கள்? அதனால்தான் ஒரு குல தெய்வம் ஏழேழு ஜென்மம் அதாவது 49 ஜென்மங்களுக்கு ஒரு வம்சத்தைக் காப்பாற்றும் என்ற வார்த்தை வந்தது.

மகள் என்பவள் திருமணம் ஆனதும் புகுந்த வீட்டிற்குச் சென்று விடுவதினால் அவளுக்கு தாய்-தந்தையின் குல தெய்வத்தை தனது குல தெய்வமாக ஏற்க பாத்யதை இல்லை. அவள் புகுந்த வீட்டின் குலதெய்வமே அவள் குல தெய்வம் ஆகி விடும்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *