• April 24, 2024

ஒரே நாள் ஒரே நேரத்தில் டிவி-யில் ஒளிபரப்பாகும் அஜித் – விஜய் திரைப்படங்கள்… டி.ஆர்.பி கிங் யாரு?

 ஒரே நாள் ஒரே நேரத்தில் டிவி-யில் ஒளிபரப்பாகும் அஜித் – விஜய் திரைப்படங்கள்… டி.ஆர்.பி கிங் யாரு?

1996ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரையிலாக மொத்தம் 12 முறை, அஜித் மற்றும் விஜய் நடிப்பில் வெளியான படங்கள் நேருக்கு நேர் மோதியுள்ளன. அதாவது ஒரே தேதியில் ரிலீஸ் ஆகியுள்ளன. அந்த பட்டியல் – ‘கோயம்புத்தூர் மாப்பிள்ளை’ மற்றும் ‘வான்மதி’ தொடங்கி ‘ஜில்லா’ மற்றும் ‘வீரம்’ வரை நீள்கிறது. ஆகமொத்தம் கடைசியாக 2014 ஆம் ஆண்டு பொங்கலின் போது தான், தமிழ் சினிமாவின் இந்த இரண்டு ‘பாக்ஸ் ஆபீஸ் ஹிட்’ நடிகர்களின் படங்களும் ஒரே நாளில் ரிலீஸ் ஆனது.

அதன் பிறகு இவ்விரு நடிகர்களுமே தனித்தனியாகவே தத்தம் படங்களை ரிலீஸ் செய்து வருகின்றனர். இதற்கிடையில் வருகிற மே தினத்தை முன்னிட்டு மீண்டும் ஒரு விஜய் – அஜித் ‘க்ளாஷ்’ திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் சற்றே வித்தியாசமாக இந்த “மோதல்” வெள்ளித்திரையில் அல்ல சின்னத்திரை வழியாக நடக்க உள்ளது. ஆம்! வருகிற மே 1 ஆம் தேதி கொண்டாடப்படும் மே தினத்தை (உழைப்பாளர் தினம்) முன்னிட்டு சன் டிவியில் விஜய் நடிப்பில் வெளியான ‘மாஸ்டர்’ திரைப்படம் ஒளிபரப்பப்பட உள்ளது.

மறுமுனையில் ஜீ தமிழ் சேனல், அஜித் நடிப்பில் வெளியான ‘வலிமை’ திரைப்படத்தை, மே தின சிறப்பு திரைப்படமாகவும், அதே சமயம் அஜித்தின் பிறந்தநாள் சிறப்பு திரைப்படமாகவும் ஒளிபரப்ப உள்ளது. கூடுதல் சுவாரசியமான விஷயம் என்னவென்றால் சன் டிவியில் ‘மாட்ஸர்’ திரைப்படமும், ஜீ தமிழ் சேனலில் ‘வலிமை’ திரைப்படமும் ஒரே நேரத்தில், அதாவது மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பப்படவுள்ளது.

முன்னதாக சன் டிவியில் மாலை 6.30 மணிக்கு, சமீபத்தில் சூர்யா நடிப்பில் வெளியான ‘எதற்கும் துணிந்தவன்’ திரைப்படம் ஒளிபரப்பப்படும் என்கிற தகவல் கிடைத்தது. சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் வெளியான இந்த திரைப்படம், எதிர்பார்த்த அளவிலான வசூலை பெற்றுக்கொடுக்கவில்லை. எனவே மே தின சிறப்பு திரைப்படமாக ‘எதற்கும் துணிந்தவன்’ ஒளிபரப்படப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது 6.30 மணி ‘மூவி ஸ்லாட்’ ஆனது மாஸ்டர் திரைப்படதிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் கூடிய விரைவில் எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தையும் நாம் சன் டிவியில் எதிர்பார்க்கலாம். ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகவுள்ள அஜித்தின் ‘வலிமை’ திரைப்படத்தோடு நேரடியாக மோத வேண்டும் என்கிற எண்ணத்தில் தான் சன் டிவி மாஸ்டர் திரைப்படத்தை களமிறக்குகிறது என்பதில் சந்தேகமே வேண்டாம். ஒப்பீட்டளவில் வலிமை திரைப்படத்தை விட மாஸ்டர் திரைப்படம் நல்ல டிஆர்பி ரேட்டிங்-ஐ கொடுக்கும் என்றே கூறலாம்.

ஏனெனில் மாஸ்டர் படத்தில் விஜய் மட்டுமல்ல, விஜய் சேதுபதியும் நடித்து உள்ளார். இருப்பினும் லேட்டஸ்ட் ஆக வெளியான திரைப்படம் என்கிற கோணத்தில் வலிமை திரைப்படமும் நல்ல டிஆர்பி ரேட்டிங்கை வழங்கலாம். எது எப்படியோ, மே தினத்தன்று அஜித் மற்றும் விஜய் ரசிகர்களின் ‘ஹேப்பினஸ் ரேட்டிங்’ கொஞ்சம் தூக்கலாகவே இருக்கும், அதில் சந்தேகமே வேண்டாம்!

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *